பாகிஸ்தானில்  இன்று 152 பேருடன் வீழ்ந்து நொருங்கிய பயணிகள் விமானத்திலிருந்து சற்றுமுன்வரை 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இவ்விமானம் வீழ்ந்து நொருங்கிய சம்பவத்திற்கு சதிவேலைகள் எதுவும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் சௌத்திரி அஹ்மட் முக்தார் தெரிவித்துள்ளார்.

இதற்கு பயங்கரவாத தாக்குதல் காரணமாக இருக்கலாம் என  பாகிஸ்தான் அரசாங்கம் சந்தேகிக்க வில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

"பயங்கரவாத தாக்குதல் குறித்த கேள்விக்கு இடமில்லை. அவ்விமானம் கராச்சியிலிருந்து புறப்பட்டபின்னர் சுமார் 90 நிமிடங்கள் வானில் இருந்தது. 9.45 மணிவரை கட்டுப்பாட்டு நிலையத்துடன் அவ்விமானம் தொடர்பில் இருந்தது" என அமைச்சர் முக்தார் கூறியுள்ளார்.

இவ்விமானத்தில் 146 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர் என பாகிஸ்தான் சிவில் விமானபோக்குவரத்து அதிகாரசபை பேச்சாளர் பர்வேஸ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

கடும் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.